மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு + "||" + Petition to the Collector's Office to remove water level encroachments near the driveway

ஓட்டப்பிடாரம் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஓட்டப்பிடாரம் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஓட்டப்பிடாரம் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர்.


இதனால் நேற்று தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னரசு, இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. இதில் பக்தர்கள் வேடம் அணிதல், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடு செய்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த அனுமதிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிச் செல்வம் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் முத்தரசன், துணைத்தலைவர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள்

புதிய மக்கள் தமிழ் தேசம் மாநில தலைவர் மகராஜன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், “குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பாரம்பரியம் மிக்கது. குலசேகரன்பட்டினத்தில் திருவிழா நடைபெறுவது நமது மாவட்டத்துக்கு பெருமை ஆகும். திருவிழாவின் முதல்நாள் கொடியேற்று நிகழ்ச்சி, 10-ம் திருநாள் சூரசம்ஹார விழாவிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். சப்பரபவனி ஊர் சுற்றி வரவும், எதிர்சேவை சப்பரபவனிக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி மறுக்கும் பட்சத்தில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி முதல் காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுக்கலை தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமையில் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், அமைப்பாளர் பெரியசாமி மற்றும் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், “முடிதிருத்தும் தொழிலாளர்கள், மருத்துவர் சமுதாய மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து தாலுகா அலுவலகத்திலும், தமிழக முதல்-அமைச்சருக்கும் பலமுறை மனு அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று வலியுறுத்தி உள்ளனர்.

த.மு.மு.க.- தமிழ் புலிகள்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் அசன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், “தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் புதுக்கோட்டை அருகே உள்ள சுங்கச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த பகுதியில் செல்லும் வாகன உரிமையாளர்களிடம் மரியாதை குறைவாகவும், கீழ்த்தரமாகவும் நடந்து வருகின்றனர். ஆகையால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனடியாக அங்கு பணியாற்றும் ஊழியர்களை பணி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ் புலிகள் அமைப்பு செயலாளர் தாஸ் தலைமையில், கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு மற்றும் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் “பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி தாமதமின்றி துரிதமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட போலீஸ் துறைக்கும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்பைஅகற்ற வேண்டும்

தூத்துக்குடி மாவட்ட தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் மங்கள ராஜ் பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், “ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சவரிமங்கலம் கிராமத்தில் அகன்ற காட்டாற்று ஓடை உள்ளது. இந்த ஓடையை அழித்தும், ஆக்கிரமிப்பு செய்தும், நீர்வழி தடுப்பு கரையை உடைத்தும் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலையை நிறுவி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஊருக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மழை நீரை சேமிக்க முடியாத நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காற்றாலை நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

தென்னிந்திய பார்வர்டு பிளாக்

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “வாதிரியார் சமுதாயத்தை சேர்ந்த எங்களை வேறு சமுதாயத்தின் உட்பிரிவில் இருந்தால்தான் ஆதிதிராவிடர் பட்டியலில் தொடரமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஆதிதிராவிடர் பட்டியல் வேண்டாம். 1956-க்கு முன்பு வாதிரியார் சாதியான நாங்கள் எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் எங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

கோவில்பட்டி உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவில், “பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளான நாங்கள் நிரந்தர வேலை மற்றும் வருமானமின்றி குடும்பத்துடன் வறுமையில் உள்ளோம். எங்களுக்கு சொந்த வீடு எதுவுமின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். ஆகையால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

துறை ரீதியான நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிதர் பிஸ்மி தலைமையில் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் சித்ரவதைகள் நடந்துள்ளன. இதுபோன்ற போக்கு இனிமேல் நடக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும். மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பான அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு
பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு.
2. இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
3. நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்டதை போன்ற சம்பவங்களைத் தடுக்க விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.
4. அரசு வேலை தராவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தை தகர்ப்பேன் டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு மனு கொடுத்த வாலிபர்
அரசு வேலை தராவிட்டால், ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பரபரப்பு மனு கொடுத்தார்.
5. பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம், காங்கிரசார் மனு
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்க வேண்டும் என்று காங்கிரசார் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.