பள்ளிக்கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு


பள்ளிக்கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 3:59 AM IST (Updated: 7 Oct 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பள்ளிக் கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் நாளை (வியாழக்கிழமை) முதல் பள்ளிக் கூடங்களை திறக்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பள்ளிக்கூடங்களை திறக்க முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் நமது நாட்டில் உள்ள அனைத்து பகுதிகள் மட்டுமில்லாமல் புதுவையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினையில் இதுவரை சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.

அவசர முடிவு

இந்தநிலையில் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசானது அவசரமாக முடிவெடுத்துள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதனடிப்படையில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பினால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கல்வி வழிகாட்டுதலை பொறுத்தவரை நமது கல்வித்துறையானது தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கும்போது புதுவை அரசும் முடிவு எடுப்பது நல்லது.

இந்த அபாயகரமான சூழ் நிலையில் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு யோசித்து முடிவு எடுக்கவேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்...

தற்போது ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் ஏனாம் பகுதியில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்று புதுவை சுகாதார அமைச்சர் கூறியதாக தெரிகிறது. எனவே பள்ளிகள் திறப்பதில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை அரசு செயல்பட வேண்டும்.

மேலும் இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் போதுமான சுகாதார பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். மருத்துவமனையில் வேலைசெய்து வரும் அனுபவம் வாய்ந்த சுகாதார பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே பணி செய்துவரும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணிநிரந்தரம் செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரங்கசாமி கூறியுள்ளார்.

Next Story