சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி சாவு


சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 6 Oct 2020 11:10 PM GMT (Updated: 6 Oct 2020 11:10 PM GMT)

லாரியில் மின்சார வயர் உரசியதால் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.

பூந்தமல்லி,

மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்மா நகரில் இருந்து நெல்லிமா நகர் செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சாலையை தோண்டி கற்களை கொட்டி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 8 கூலித்தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர்.

அப்போது லாரியில் வந்த ஜல்லி கற்களை சாலையில் கொட்டி சரி செய்து வந்தனர். அப்போது லாரியின் மேலே சென்ற மின்கம்பியில் லாரியின் மேல்பாகம் உரசியது. இதில் காஞ்சீபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் கன்னியப்பன், பச்சையப்பன் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சாவு

உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த கன்னியப்பன், பச்சையப்பன் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக இருப்பதாகவும் தற்போது விபத்து நடைபெற்ற உயரழுத்த மின் கம்பியை கூட சாலையில் சற்று ஓரமாக அமைக்க கூறியும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இது போன்று மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story