மாவட்ட செய்திகள்

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: செல்போன் சிக்னல் மூலம் சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை + "||" + Thattarmadam trader murder case: CPCID through cell phone signal Serious investigation

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: செல்போன் சிக்னல் மூலம் சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: செல்போன் சிக்னல் மூலம் சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக செல்போன் சிக்னல் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். கைதான 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி செல்வன் (வயது 32). இவர் நிலத்தகராறு காரணமாக காரில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். திருமணவேலின் உறவினர்கள் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

விசாரணை

அதன்பேரில், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு 4 பேரையும் அழைத்து வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தட்டார்மடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் எந்த பகுதியில் இருந்து வியாபாரி செல்வனை காரில் கடத்தினார்கள், எங்கு அழைத்து சென்று கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

செல்போன் சிக்னல்

மேலும், சென்னை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைதான 4 பேரின் செல்போன் சிக்னல்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதன்படி 4 பேரிடம் தட்டார்மடம் பகுதியில் வைத்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் கூறிய இடமும், செல்போன் சிக்னல்கள் காண்பிக்கும் இடமும் சரியாக உள்ளதா? என்பதை ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

கொலை நடந்தபோது அவர்கள் யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்கள் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் 2 பேர் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர்

அதேபோன்று தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனுக்கு, செல்வன் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனால் அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள போலீசாரை உஷார்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனை உறுதிபடுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் பதிவுகள் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், இன்ஸ்பெக்டர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று தேடினார். அவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டார். தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் எங்கெல்லாம் தேடி சென்றனர்? என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களின் செல்போன் சிக்னல்கள் மூலம் பெறப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் அளித்த தகவல்கள் சரிதானா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் ஏதேனும் முரண்பாடுகள் தென்பட்டால் போலீசாரை மீண்டும் விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில் கைதான 4 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மதியம் 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்க அழைத்துச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
குடும்பத்தகராறில் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி பரிதாபமாக இறந்தார்.
3. 3 சாட்சிகளிடம் விசாரணை
கோடநாடு கொலை வழக்கில் 3 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
4. கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிபதிகள், வக்கீல்களுக்கு முன்னுரிமை கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிபதிகள், வக்கீல்களுக்கு முன்னுரிமை கோரும் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
5. பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட்டர் பதிவு: நடிகை ஓவியா மீது, பா.ஜ.க. போலீசில் புகார் மாநில சைபர் கிரைம் விசாரணை
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ.க. வக்கீல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.