இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க ஏலகிரிமலையில் அரசு பஸ் சிறைபிடிப்பு
ஏலகிரிமலையில் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் உள்ள மேட்டுகனியூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பவர்களின் உடல்களை அவரவர் நிலத்திலும், பொது இடங்களிலும் புதைத்து வந்தனர். அதே பகுதியில் உள்ள ஊரில் இறப்பவர்களின் உடல்களை நிலாவூர் செல்லும் சாலையில் சுமார் 4½ ஏக்கருக்கு மேல் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் 5 தலைமுறைக்கும் மேலாக புதைத்து வந்துள்ளனர்.
கடந்த வாரம் மேட்டுகனியூர் பகுதியில் இறந்த முதியவர் உடலை நிலாவூர் சாலை அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய பொதுமக்கள் சென்றபோது, அந்தப்பகுதியை சுற்றிலும் வீட்டுமனை வாங்கியவர்கள், சுடுகாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக இந்த இடத்தில் உடல்களை புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் மேட்டுகனியூர் பகுதியில் வயது முதிர்வு காரணமாக இறந்த முதியவரின் உடலை புதைக்க சென்றபோது ஆக்கிரமிப்பாளர்கள் தடை செய்வார்களோ என எண்ணி, திருப்பத்தூரில் இருந்து நிலாவூர் பகுதிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரிமலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் என்பவரை தொடர்புகொண்டு பேசினார். அப்போது உடலை புதைக்கயாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் ஆகியோர் சுடுகாட்டு பகுதிக்கு சென்று, உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் எனக் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story