பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது


பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Oct 2020 3:08 PM GMT (Updated: 7 Oct 2020 3:08 PM GMT)

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகாவுக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். இதில் பிள்ளாநல்லூர், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், சீராப்பள்ளி, அத்தனூர், பட்டணம், புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிள்ளாநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பேரூராட்சியை சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வயதானவர்கள் இதய நோய் மற்றும் சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி தென்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். கொரோனா பரவலை தடுப்பது குறித்த விவரங்களை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களில் செல்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், ஸ்ரீபுரம் தாசில்தார் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர் சரவணகுமார், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து கலெக்டர் மெகராஜ் குருசாமிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story