மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் - விவசாயிகள் கவலை


மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 7 Oct 2020 3:50 PM GMT (Updated: 7 Oct 2020 3:50 PM GMT)

மீன்சுருட்டி அருகே கருவாட்டு ஓடையை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கருவாட்டு ஓடை உள்ளது. ராஜேந்திர சோழன் காலத்தில் வெட்டப்பட்ட பொன்னேரியில் இருந்து தண்ணீர் இந்த கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு சென்று வடவாற்றில் கலக்கிறது.பொன்னேரியில் இருந்து தண்ணீர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று வடவாற்றை அடைகிறது. இந்நிலையில் கருவாட்டு ஓடையில் மழை காலங்களில் தண்ணீர் விரைவாக செல்ல முடியாத அளவில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து சூழ்ந்துள்ளன. இதனால் ஓடையின் இருபக்கங்களிலும் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஓடையின் இருபக்கங்களிலும் விவசாயிகள் குறுகிய கால தோட்ட பயிர்களான வெண்டை, கத்தரி, தர்பூசணி, வெள்ளரி, கடலை மற்றும் பூந்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஓடையில் அதிகமாக கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதையொட்டி மழை காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த ஓடையின் தண்ணீரை பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக இந்த கருவாட்டு ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, ஓடையை ஆழப்படுத்தி இரண்டு கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story