திருச்சி அருகே டேங்கர் லாரி மோதியதால் விபரீதம்: மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் பலி + "||" + Near Trichy As the tanker truck collided The motorcycle petrol tank exploded Youth kills
திருச்சி அருகே டேங்கர் லாரி மோதியதால் விபரீதம்: மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் வடக்கு பாகனூரை சேர்ந்தவர் ஆரோக்கிய இருதயசாமி (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் ஒருவர், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவிலில் வசித்து வருகிறார். நண்பரை பார்க்க, ஆரோக்கிய இருதயசாமி நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வண்ணாங்கோவில் அருகே சென்றபோது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக ஆரோக்கிய இருதயசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரி மோதிய வேகத்தில், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் ‘டமார்‘ என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஆரோக்கிய இருதயசாமி தூக்கி வீசப்பட்டதுடன், அவர் உடல் முழுவதும் தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி உயிருக்கு போராடினார். அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் ஆரோக்கிய இருதயசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.