மின்சார ரெயில்களில் டப்பாவாலாக்கள் பயணிக்கலாம் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு


மின்சார ரெயில்களில் டப்பாவாலாக்கள் பயணிக்கலாம் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 9:25 PM GMT (Updated: 7 Oct 2020 9:25 PM GMT)

மின்சார ரெயில்களில் பயணிக்க டப்பாவாலாக்களுக்கு அனுமதி அளித்து இருப்பதாக மத்திய, மேற்கு ரெயில்வேக்கள் தெரிவித்து உள்ளன.

மும்பை,

மும்பையில் அலுவலகம் செல்வோருக்கு அவர்களது வீட்டில் இருந்து மதிய உணவை டிபன் பாக்ஸ்களில் வாங்கி கொண்டு, சுடச்சுட பணியிடங்களுக்கே சென்று வழங்கி வரும் டப்பாவாலாக்களின் சேவையும் கடந்த 6 மாதத்துக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் முடங்கி போனது. இந்த டப்பாவாலாக்கள் தங்களது வேலைக்காக மின்சார ரெயில்களையே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அத்தியாவசிய ஊழியர்களுக்காக இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்களில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று கடந்த மாதம் 30-ந் தேதி மாநில அரசு அறிவித்த தளர்வுகளில் டப்பாவாலாக்களுக்கு கியூ.ஆர். கோர்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ரெயில்வேக்கள் அறிவிப்பு

இந்தநிலையில் மின்சார ரெயில்களில் டப்பாவாலாக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே அறிவித்தன. இதற்கு டப்பாவாலாக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அதே வேளையில் கியூ.ஆர். கோர்டுடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக்கக்கூடாது, தாங்கள் பயன்படுத்தி வரும் அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் ரெயில்வேக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதுபற்றி மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், மாநில அரசு ஒப்புக்கொண்டால் டப்பாவாலாக்களை அவர்களது அடையாள அட்டையுடன் அனுமதிக்க தயார் என்றார்.

இதற்கிடையே மும்பை டப்பாவாலா சங்க செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர் கூறியதாவது:-

மும்பை திரும்பி விட்டனர்

எங்களது 130 ஆண்டு சேவையில் முதல் தடவை யாக 6 மாதத்திற்கு மேலாக பணி முடங்கியது. டப்பாவாலாக்கள் பெரும்பாலானோர்கள் புனே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஊரடங்கால் சொந்த ஊருக்கு சென்ற அவர்கள் மும்பை திரும்பி விட்டனர். 5 ஆயிரம் டப்பாவாலாக்கள் உள்ள னர். ஒவ்வொரு டப்பா வாலாவும் தினமும் 20 முதல் 22 பேருக்கு உணவு எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த அளவுக்கு உணவு டப்பாக்கள் கிடைக்காது. பலர் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். பல கட்டிட சங்கங்கள் வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. எனவே முதலில் 4 முதல் 5 டப்பாக்களுடன் ஒவ்வொரு டப்பாவாலாக்களும் தங்களது பணியை தொடங்க உள்ளனர். அவர்களுக்கு முழுமையான வேலை கிடைக்க சற்று கால அவகாசம் பிடிக்கும். எங்களது டப்பாவாலாக்கள் பணியின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்சார ரெயில்களில் செல்ல தூதரகங்களில் பணி புரிவோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story