பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் தாய், குழந்தை பலி விசாரணை நடத்த உத்தரவு


பிரசவத்தில் அதிக ரத்தபோக்கு சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டதால் தாய், குழந்தை பலி விசாரணை நடத்த உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2020 3:01 AM IST (Updated: 8 Oct 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

பிரசவம் ஆன பெண்ணுக்கு ஏற்பட்ட ரத்தபோக்கிற்கு, சிகிச்சை கிடைக்காமல் நடந்த அலைக்கழிப்பால் தாய், குழந்தை பலியாகினர். இது பற்றி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மும்பை புறநகர் பகுதியான கர்ஜத் பிட் கிராமத்தை சேர்ந் தவர் பூனம் ருத்தே (வயது22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, கடந்த 4-ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் பிரவச வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் நேரலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூனம் ருத்தேவை அழைத்துசென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு பணியில் டாக்டர் இல்லாததால் நர்சு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அப்போது பிறந்த குழந்தை அழவில்லை.

ரத்தப்போக்கு

மேலும் பூனம் ருத்தேவிற்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க டாக்டர் அங்கு பணியில் டாக்டர் இல்லாததால் தாயையும், சேயையும் கர்ஜத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன் சில் அனுப்பி வைத்தனர்.

அங்கும் டாக்டர் இல்லாததால் கலம்பொலியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு இருவரையும் கொண்டு செல்ல அங்கிருந்த ஊழியர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் அங்கு சென்றபோது சிகிச்சை கிடைக்காமல் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. மேலும் பூனம் ருத்தேவிற்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரும் மயக்கமடைந்தார்.

தாயும் பலி

இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு சென்ற பின்னர் அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே பூனம் ருத்தேவும் உயிரிழந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். காலை 7 மணி அளவில் பிரசவம் ஆன பூனம் ருத்தேவிற்கு ரத்த போக்கிற்கு சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிர் இழந்ததாகவும், இதற்கு டாக்டர்கள், நர்சுகள் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ராய்காட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுதாகர், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story