கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் குறைப்பு எதிர்ப்பு கிளம்பியதால் எடியூரப்பா அதிரடி உத்தரவு


கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் குறைப்பு எதிர்ப்பு கிளம்பியதால் எடியூரப்பா அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2020 3:33 AM IST (Updated: 8 Oct 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தை குறைத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இனிமேல் முகக்கவசம் அணியாமல் வலம் வந்தால் நகரங்களில் ரூ.250-ம், கிராமப்புறங்களில் ரூ.100-ம் அபராதம் வசூலிக்கப்படும்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில், கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக நகரங்களில் ரூ.1,000-மும், கிராமங்களில் ரூ.500-ம் விதிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு அபராதத்தை எப்படி செலுத்துவது என்று கேள்வி எழுப்பினர். அபராதம் செலுத்தாதவர்களை போலீசார் போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதத்தொகையை குறைத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உத்தரவு உடனடியாக அமல்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாளில் இருந்து, அதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டுதலை அரசு பின்பற்றி ஊரடங்குகளை அறிவித்தது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் இல்லாத சூழ்நிலையில் முகக்கவசத்தை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவுவது தவிர்க்க முடியாது.

கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரங்களில் ரூ.1,000, கிராமப்புறங்களில் ரூ.500 அபராதமாக விதித்து அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இந்த அபராதத்தொகையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத்தை நகரங்களில் ரூ.250 ஆகவும், கிராமங்களில் ரூ.100 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

கைகளை கழுவுவது...

பிரதமர் மோடி கூறியது போல் உயிர் மற்றும் வாழ்க்கை இரண்டும் சம அளவில் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஏற்ப அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், முகக்கவசம் அணிவது, சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Next Story