சென்னிமலை அருகே 2 இடங்களில் அதிக வேகத்தில் சென்ற டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு


சென்னிமலை அருகே 2 இடங்களில் அதிக வேகத்தில் சென்ற டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 5:52 AM IST (Updated: 8 Oct 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே 2 இடங்களில் அதிக வேகத்தில் சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தார்கள்.

சென்னிமலை,

சென்னிமலை அருகே பனியம்பள்ளி, அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள், அதிக வேகமாக செல்வதால் ஜல்லி கற்கள் தார் ரோட்டில் சிதறி வருவதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் செம்மண் எடுத்து செல்லும் லாரிகளும் அதிக பாரம் ஏற்றி முறையாக மூடாமல் கொண்டு செல்வதால் புழுதி பறப்பதுடன், தார் சாலையும் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் சென்னிமலை அருகே அப்பத்தாள் கோவில் என்ற இடத்தில் மண் ஏற்றி சென்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘அதிக பாரம் ஏற்றி குறுக்கு வழியில் டிப்பர் லாரிகள் அதிக வேகத்தில் செல்வதால் அப்பத்தாள் கோவில் பாதை முழுமையாக சேதம் அடைந்து வருகிறது. அதனால் இந்த வழியாக செல்ல அனுமதிக்க மாட்டோம்‘ என கூறினார்கள். பின்னர் அந்த வழியாக லாரிகள் இயக்க மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

மற்றொரு இடத்தில்...

அதேபோல் சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு தோப்புப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னிமலை, பெருந்துறை, அறச்சலூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.

இந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு அதி வேகத்தில் செல்வதால் ரோடு முழுக்க ஜல்லி கற்கள் சிதறி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில், நேற்று திடீரென பனியம்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு என்ற இடத்தில் ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை (அதாவது இன்று வியாழக்கிழமை) மாலை பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார், வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

Next Story