பிரதமர் மோடி, பதவிக்கு வந்த பிறகு நாடு எந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது? டி.கே.சிவக்குமார் கேள்வி


பிரதமர் மோடி, பதவிக்கு வந்த பிறகு நாடு எந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது? டி.கே.சிவக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 9 Oct 2020 3:40 AM IST (Updated: 9 Oct 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு நாடு எந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது? என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி கேட்டுள்ளார்.

பெங்களூரு,

நாட்டில் மிகப்பெரிய பெரும்பான்மை பலம் உள்ள அரசு இருக்கிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு வழங்கினர். அதுபற்றி நாங்கள் பேச மாட்டோம். ஆனால் மத்திய பா.ஜனதா அரசு சொன்னபடி நடந்து கொண்டதா?. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?. இந்த அரசால் நாட்டுக்கு கிடைத்த பலன் என்ன?. முன்பு பொருளாதார நிபுணரான மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நாடு எவ்வாறு வளர்ச்சி கண்டது. மோடி பிரதமர் பதவிக்கு வந்த பிறகு நாடு எந்தெந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது?.

படித்த இளைஞர்களுக்கு மோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளாரா?. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டுவந்தாரா?. நாட்டின் எல்லையை பாதுகாத்தாரா?. நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமையை பாதுகாத்தாரா?. அமைதியை நிலைநாட்டினாரா?. விவசாயிகள், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதா?. இந்த கேள்விகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் பதில் கூற வேண்டும். நான் இயற்கை மீது நம்பிக்கை கொண்டவன்.

சட்டசபை இடைத்தேர்தல்

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளது. மனித சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய நேரத்தில் மக்களை காப்பாற்றாத அரசு நமக்கு தேவையா?. நாட்டில் அமைதியை உருவாக்கி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும். கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கவில்லை. அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

வருகிற 14-ந் தேதி ராஜராஜேஸ்வரிநகரிலும், 15-ந் தேதி சிராவிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இந்த நிகழ்விலும் நான் மற்றும் சித்தராமையா ஆகியோர் கலந்துகொள்வோம். நான் ஊழல்வாதியா அல்லது தத்துவஞானியா என்பதை மந்திரி சி.டி.ரவி மக்கள் முன்பு கூற வேண்டும். ஊழல்வாதியாக இருந்தால் அதற்கு ஆவணங்களை வெளியிட வேண்டும். சிலருக்கு எனது பெயரை பயன்படுத்தினால் புகழ் கிடைக்கிறது. அவர்கள் பேசிக்கொள்ளட்டும். அதுபற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story