கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2020 10:15 PM GMT (Updated: 8 Oct 2020 10:15 PM GMT)

கர்நாடகத்தில் பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை குறைக்கவும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி-கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் பள்ளி-கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மத்திய அரசு, பள்ளி-கல்லூரிகளை வருகிற 15-ந் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள உடுப்பி, பல்லாரி, தாவணகெரே, ஹாசன், மைசூரு, பெலகாவி, சிவமொக்கா, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, தார்வார், துமகூரு உள்ளிட்ட 11 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மீன்வளத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா மரண விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் எடியூரப்பா உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரிப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடன் கலந்துரையாடினார். அப்போது, கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதம் அதிகமாக இருப்பதாகவும், இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதுகுறித்து மாவட்ட கலெக்டர்களிடம் எடுத்துக் கூறினேன். கொரோனா வைரஸ் பரவலை குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக கொரோனா மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. முகக்கவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தவே அபராதம் விதிக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மைசூருவில் தசரா விழா

மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நோய் பாதிப்பு உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். மேலும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மருந்து தொகுப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். தேவையான இடங்களில் மட்டும் ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கூறி இருக்கிறேன். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து 72 மணி நேரத்தில் இறந்தவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இதுவரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களில் 50 சதவீதம், 72 மணி நேரத்திற்குள் நடந்துள்ளது. அதனால் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்பதை எடுத்துரைத்துள்ளேன். மைசூருவில் தசரா விழாவை மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் கொரோனாவை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

நிபுணர்களின் ஆலோசனை

தசரா விழா நிகழ்ச்சிகளை காணொலிகாட்சி மூலம் ஒளிபரப்பு செய்யலாம். தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிவமொக்காவில் கொரோனா பாதிப்பு 20 சதவீதமாக இருந்தது. இது தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. இதை இன்னும் குறைத்தால், சிவமொக்கா, மாநிலத்திற்கே முன்மாதிரியாக திகழும் என்று கூறியுள்ளேன்.

கொரோனா பரவி வரும் நிலையில், கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளை திறக்க பெற்றோரின் ஒப்புதல் தேவை. மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து நிபுணர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பிறகே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story