ஆரோவில் பகுதியில் பெண்களிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது


ஆரோவில் பகுதியில் பெண்களிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 10:46 PM GMT (Updated: 8 Oct 2020 10:46 PM GMT)

ஆரோவில் பகுதியில் பெண்களிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் அசோகன். பால் வியாபாரி. இவரது மனைவி விஜயராணி (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் விஜயராணி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போட்டோ எடுப்பதாக நடித்து விஜயராணியிடம் இருந்து 8 பவுன் நகையை திருடிச்சென்றனர்.

இதற்கு மறுநாள் நாவற்குளம் பகுதியில் மொபட்டில் சென்ற ஏஞ்சல் ராணி (38), அவரது மாமியார் பாக்கியசீலி (60) ஆகியோரின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகளை பறித்துச்சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்தை கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து அவர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் மற்றும் நாவற்குளம் பகுதியில் நடந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த முருகையன் (45), முத்துநாராயணபுரம் சரவணன் (32), கடலூர் முதுநகர் ஷாஜகான் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் இரும்பை சிவன்கோவில் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று, முருகையன் உள்பட 3 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் உருக்கிய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் தாங்கள் கைவரிசை காட்டிய நகைகளை உருக்கி கட்டிகளாக வைத்துள்ளனர்.

வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா?

கைது செய்யப்பட்ட 3 பேரும் புதுவை கருவடிக்குப்பத்தில் உள்ள மூதாட்டியின் கம்மலை அறுத்துச்சென்ற வழக்கும் போலீசில் உள்ளது.வேறு ஏதேனும் கொள்ளை, வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story