சம்போடையில் நெடுஞ்சாலையில் பள்ளம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சம்போடையில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி வழியாக செல்லும் திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் தற்போது திருச்சி- ஜெயங்கொண்டம் குறுக்குச்சாலை வரை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மீன்சுருட்டி அருகே உள்ள சம்போடை கிராமத்தில் குடிநீர் குழாயை சாலையின் குறுக்கே அமைந்துள்ளனர். இந்த சாலை விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சம்போடை கிராமத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் சுமார் ஒரு அடிக்கு மேல் நெடுஞ்சாலையில் பள்ளம் உள்ளது.
அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையில் சாலையின் குறுக்கே பள்ளம் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை கீழே விழுந்து காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு செல்கின்றனர். இந்த சாலையில் சென்னை, புதுச்சேரி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகளுக்கு தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்த பள்ளம் தெரிவதில்லை. அருகே வந்ததும் பள்ளம் இருப்பதை கண்டு வாகன ஓட்டிகள் உடனடியாக பிரேக் பிடிப்பதால், பஸ்கள் போன்றவற்றில் பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது அந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் கம்பு நடப்பட்டு, அதில் சிவப்பு துணி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது.
இதுபோன்ற பள்ளங்கள் திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் சம்போடையில் உள்ள பள்ளத்தை உடனடியாக மூடி, விபத்து ஏற்படாத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், மற்ற பகுதிகளில் உள்ள பள்ளங்களையும் மூட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story