கல்வராயன்மலையில் விடிய விடிய கொட்டிதீர்த்த மழை கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் - 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கல்வராயன்மலையில் விடிய விடிய கொட்டிதீர்த்த மழை கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் - 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2020 11:30 AM IST (Updated: 9 Oct 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன் மலையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 6 கிராமங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் கல்வராயன்மலை பகுதியான பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைபாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வரும். 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

இந்த நிலையில் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 44 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 17-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் புதிய பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது கடந்த 21-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இதனிடையே சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பாசனத்துக்காக கடந்த 1-ந்தேதி கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அதன்படி புதிய வாய்க்காலில் வினாடிக்கு 50 கன அடியும், பழைய வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு பழைய வாய்க்காலில் வினாடிக்கு 120 கன அடியும், புதிய வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடியும் என தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பா பயிருக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதில் கல்வராயன்மலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பொட்டியம், கல்படை ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு நள்ளிரவு 12 மணி அளவில் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. ஏற்கனவே அணை 44 அடியை எட்டியிருந்ததால் பாதுகாப்பு கருதி கல்வராயன் மலையில் இருந்து ஆறுகளின் வழியாக அணைக்கு வந்த 1,000 கன அடி நீரை அப்படியே அதிகாரிகள் வெளியேற்றம் செய்தனர்.

பிறகு படிப்படியாக 2 ஆயிரம் கனஅடி, 1500 கன அடி என பழைய பாசன வாய்க்கால் வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள அக்கராயபாளையம், வடக்கநந்தல், கச்சிராயபாளையம், ஏர்வாய்ப் பட்டினம், தோப்பூர், பட்டா குறிச்சி ஆகிய 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அக்கராயபாளையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்குப்பிறகு ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது கோமுகி அணையில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றில் திறந்துவிடாமல் விவசாயிகளுக்காக சேமித்து வைத்து 2-ம் பருவ சாகுபடிக்கும் தண்ணீர் வழங்கும் வகையில் பாசன வாய்க்காலில் சிறிது சிறிதாக தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story