டி.வி. சேனல் மோசடியை மும்பை போலீசார் அம்பலப்படுத்தியது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை சஞ்சய் ராவத் கூறுகிறார்


டி.வி. சேனல் மோசடியை மும்பை போலீசார் அம்பலப்படுத்தியது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை சஞ்சய் ராவத் கூறுகிறார்
x
தினத்தந்தி 10 Oct 2020 2:54 AM IST (Updated: 10 Oct 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. சேனல் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடியை போலீசார் அம்பலப்படுத்தியது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பி.ஏ.ஆர்.சி.) கணக்கிட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறையில் மோசடி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த மோசடியில் ரிபப்ளிக் ஆங்கில செய்தி சேனல் மற்றும் 2 மராத்தி சேனல்கள் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்தார்.

இந்தநிலையில் மும்பை போலீஸ் கமிஷனரின் குற்றச்சாட்டை ரிபப்ளிக் செய்தி சேனல் நிறுவனம் மறுத்து உள்ளது. தங்கள் சேனலில் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததால் பழிவாங்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-

எங்கிருந்து பணம் வந்தது?

மிகப்பெரிய இந்த மோசடியை அம்பலப்படுத்த மும்பை போலீசார் தைரியமான நடவடிக்கை எடுத்து உள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான். அனைத்து மர்மங்களும் விரைவில் வெளிவரும். ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. ஏன் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்? யார் இதற்கு பின்னால் இருக்கிறார்கள்? அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது?.

மும்பை பேலீசார் பதிலடி கொடுக்கும் எண்ணத்திலோ அல்லது பழிவாங்கும் நோக்கத்துடனோ இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு மற்றும் தாக்கரே குடும்பத்தையும் குறிவைத்து சேனல்கள் செயல்பட்ட விதம் பழிவாங்கும் செயல் இல்லையா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story