உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது


உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2020 4:12 AM IST (Updated: 10 Oct 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி சாலவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆயுதங்களுடன் இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.அவர்களை சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்த தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த மும்பையை சேர்ந்த குலாம் கவுஸ் (வயது 25), சுனில் ராம் சால் பிரஜாபதி (25), ஆகாஷ் குப்தா (20) என்பது தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்துக்கு...

மேலும் அவர்களுடன் 3 பேர் வந்ததாகவும் அவர்கள் போலீசார் வந்தது தெரிந்தவுடன் சென்னை விமான நிலையத்துக்கு தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 79 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

மராட்டிய மாநிலத்தை சோ்ந்த 3 பேரை முக்கிய வழக்கில் விசாரிக்க வேண்டி உள்ளது. அவர்கள் மும்பைக்கு விமானத்தில் தப்பி செல்ல வந்து இருப்பதாகவும் அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர். விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மும்பை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர்களின் பட்டியலை ஆய்வு செய்தனர்.

அப்போது சாலவாக்கம் போலீசார் கூறிய 3 பேர் விமானத்தில் ஏற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருப்பது தெரியவந்தது. விமானத்தில் ஏற சென்ற மும்பையை சேர்ந்த லட்சுமண் (30), அயூப்கான் (33) , அமீர்முகமது (35) ஆகியோரை பாதுகாப்பு படையினர் கீழே அழைத்து வந்தனர். 3 பேரையும் சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனர்.

6 பேர் கைது

அவர்களும் அதே தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் என்பதும், தொழிற்சாலை மூடி இருப்பதால் அதில் தங்கம் இருக்கலாம் அதை கொள்ளையடித்து செல்லலாம் என்று 6 பேரும் திட்டம் தீட்டி அங்குவந்ததாகவும் தங்கத்தை தேடி கொண்டிருக்கும் நேரத்தில் மாட்டி கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை செய்தார். வேறு எங்காவது அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணை செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story