சிறுமி கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகை + "||" + Barber workers block Nellai Collector's office to appeal in girl's murder case
சிறுமி கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகை
சிறுமி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை மாவட்ட மருத்துவ சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு நேற்று காலை திரண்டனர். அங்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்களும் கூடியிருந்தனர். அங்கிருந்து நெல்லை மாவட்ட மருத்துவ சவர தொழிலாளர் சங்க தலைவர் சுந்தர் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. செயலாளர் சுடலை, பொருளாளர் அருண் தவசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வழியாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
மேல்முறையீடு
திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டி என்ற கிராமத்தில் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இதுபோன்று குற்றங்கள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
கலெக்டர் வந்தார்
அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவாயிலை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் இரும்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ஷில்பா காரில் தனது அலுவலகத்துக்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரது காருக்கு வழிவிட்டபடியே கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டதும், கலெக்டர் காரில் உள்ளே சென்றார்.
அதன்பிறகும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
2 ஆயிரம் கடைகள் அடைப்பு
குரும்பபட்டி கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவ தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் முடிதிருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்த போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். சிறுமி கொலைக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் துரை, சுடலை, அபிப் ரகுமான், மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவ சவர தொழிலாளர்கள் நேற்று தங்கள் கடைகளை அடைத்து இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திசையன்விளை மற்றும் உவரியில் உள்ள அனைத்து முடிதிருத்தும் கடைகளும் மூடப்பட்டு இருந்தது.