குன்றத்தூர் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குன்றத்தூர் அருகே விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து எல்லை கற்களை பிடுங்கி எறிந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியில் திருமுடிவாக்கம் செல்லும் சாலையோரத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் நடந்து வந்தது. தற்போது அந்த விவசாய நிலங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு அதை வீட்டுமனைகளாக பிரிப்பதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் வீட்டு மனைகளுக்காக அங்கு நடப்பட்டிருந்த எல்லை கற்களை பிடுங்கி எறிந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு விவசாயம் செய்து வருகிறோம். மேலும் இங்கு விளையும் பொருட்களில் பாதியை நிலத்தின் உரிமையாளர்களுக்கு கொடுத்து விட்டு மீதியை நாங்கள் வைத்துக்கொள்வோம். நிலத்தின் உரிமையாளர்களில் சிலருக்கு அவர்களது நிலம் எங்கு உள்ளது என்று அவர்களுக்கே தெரியாது. அதுபோன்ற நிலங்களை நாங்கள் விவசாயம் செய்து பாதுகாத்து வருகிறோம்.
தற்போது திடீரென இந்த பகுதி முழுவதும் தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்ததற்கு எந்த வித நிவாரணத்தொகையையும் வழங்காமல் இடத்தை சீரமைத்து கற்களை கொட்டி சாலை அமைத்து வீட்டு மனைகளாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த பணிகள் நடக்காமல் தடுத்து நிறுத்தி உள்ளோம். மேலும் இந்த இடத்தின் ஒரு பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் குழாயும் செல்கிறது. இங்கு கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவே இதற்கு உரிய தீர்வு காணாமல் இங்கு வீட்டு மனைகளாக பிரிக்கக் கூடாது எனவும், இதனால் இங்கு முற்றிலும் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story