“வைபை” டெபிட் கார்டுகள் மூலம் ரூ.10 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது
‘வைபை’ டெபிட் கார்டுகள் மூலம் ரூ.10 லட்சம் நூதன மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரிவிஸ்வநாத் (வயது 28). இவர், கடந்த மாதம் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ஜூலை மாதம் 29-ந் தேதி எனது வைபை டெபிட் கார்டு தொலைந்து விட்டது. அதற்கு அடுத்த 2 நாட்களில் எனது கார்டை பயன்படுத்தி ரூ.15 ஆயிரம் வரை எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த கார்டை வங்கியில் கூறி பிளாக் செய்து விட்டதாக கூறி இருந்தார்.
இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கும் மாற்றப்பட்டது. இதையடுத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கே.கே.நகரை சேர்ந்த சரவணன் (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான சரவணன், காதல் திருமணம் செய்துகொண்டு தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது குழந்தைக்கு பிறக்கும் போதே இருதயம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக தன்னிடமிருந்த பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டதால் போதிய வருவாய் இல்லாமல் தவித்தார். இதனால் நூதன முறையில் விரைவில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். சரவணன் ஏற்கனவே வங்கியில் வேலை செய்து இருந்ததால் தனது நண்பரிடம் புதிதாக தொழில் தொடங்கப்போவதாக கூறி நண்பரின் பெயரிலேயே ஸ்வைப்பிங் எந்திரம் வாங்கினார்.
பின்னர் ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களுக்கும் சென்று அங்கு வாடிக்கையாளர்கள் தவறவிட்டுச் செல்லும் வைபை ஏ.டி.எம். கார்டுகளை எடுத்து வந்து, தான் வாங்கி வைத்துள்ள ஸ்வைப்பிங் எந்திரம் அருகே காட்டினால் போதும் ரகசிய எண் ஏதும் தேவையில்லை. ஒருமுறைக்கு ரூ.2 ஆயிரம் வரை எடுக்கலாம்.
இதுபோல் பல ஏ.டி.எம். கார்டுகளை எடுத்துவந்து இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இவரது மனைவி மற்றும் நண்பர்களிடம் தனது வங்கி கணக்கில் இருந்து மற்றவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதால் தனக்கு கமிஷன் அடிப்படையில் பணம் வந்து இருப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான சரவணனிடம் இருந்து 14 வைபை ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஸ்வைப்பிங் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story