வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.11 லட்சம் அபேஸ் முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு


வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.11 லட்சம் அபேஸ் முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Oct 2020 2:31 AM IST (Updated: 12 Oct 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

வசாயில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த ரூ.11 லட்சத்தை அபேஸ் செய்த முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பாதர்வாடி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் ஏ.டி.எம் எந்திரம் கடந்த 2 வாரங்களாக பழுதடைந்து இருந்தது. இதனால் பழுது பார்க்க சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அப்போது எந்திரத்தில் இருந்த ரூ.11 லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவும் பழுது காரணமாக செயல்படவில்லை.

வலைவீச்சு

இருப்பினும் போலீசார் நடத்திய விசாரணையில், எந்திரத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் ஊழியர் சாகர் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விராரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது சாகர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்தை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். விசாரணையில், சாகர் ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு பெட்டகத்தை திறந்து பணத்தை அபேஸ் செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story