ஆரே காலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்கிற்கு மாற்றம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு


ஆரே காலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்கிற்கு மாற்றம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 3:06 AM IST (Updated: 12 Oct 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை,

மும்பையில் கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆரேகாலனியில் மெட்ரோ பனிமனை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும் அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு மெட்ரோ பணிகளுக்காக ஆரேகாலனியில் மரங்களை வெட்ட சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி அங்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் சிவசேனா தலைமையிலான அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரேகாலனியில் நடந்து வந்த மெட்ரோ பணிகளுக்கு தடைவிதித்தது. மேலும் ஆரேகாலனி பகுதியை வனப்பகுதியாக அறிவித்தது.

இந்தநிலையில் ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி

இது குறித்து அவர் கூறுகையில், “ஆரேயில் உள்ள பல்லூயிர்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். நகர்பகுதியில் எங்கும் 800 ஏக்கர் வனப்பகுதி கிடையாது. மும்பை இயற்கையான வனப்பகுதியை கொண்டு உள்ளது. ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்கில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு மாற்றப்படுகிறது. ஏற்கனவே ஆரேகாலனியில் மெட்ரோ பணிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் வேறு பொதுப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்” என்றார்.

இதற்கிடையே மெட்ரோ ரெயில் பணிமனை ஆரேகாலனியில் இருந்து காஞ்சூர்மார்கிற்கு மாற்றப்படுவதால் மெட்ரோ 3-வது திட்டப்பணிகள் முடிய 3 ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம் எனவும், கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும் எனவும் மும்பை மெட்ரோ கழக அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story