வேதாரண்யத்தில் தொடர் மழையால், உப்பு உற்பத்தி பாதிப்பு 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு


வேதாரண்யத்தில் தொடர் மழையால், உப்பு உற்பத்தி பாதிப்பு 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 5:31 AM IST (Updated: 12 Oct 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியபோது கடும் வெயிலின் காரணமாக அதிக அளவில் உப்பு உற்பத்தி ஆனது. அதே நேரத்தில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

மழை நீரால் உப்பு பாத்திகள் சேதமடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் பருவமழை தொடங்கிவிடும் என்பதால், இனி இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் உப்பு விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருப்பு வைத்திருந்த உப்பு சேதம் அடையாமல் இருக்க தார்பாய், பனை ஓலை மட்டைகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். உப்பு உற்பத்தி இல்லாததால் 15 ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

Next Story