தஞ்சை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி முடிந்தது


தஞ்சை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி முடிந்தது
x
தினத்தந்தி 12 Oct 2020 5:42 AM IST (Updated: 12 Oct 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி முடிந்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தமிழகத்தின் உளணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பதும் தஞ்சை மாவட்டம் தான். இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 12½ லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரும் பயன்பெறும்.

நடவு பணிகள் தீவிரம்

இந்த நிலையில் குறுவை சாகுபடி பணிகள் நிறைவடைந்ததையடுத்து சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேரடி நெல் விதைப்பும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 3 லட்சத்து 16 ஆயிரத்து 64 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாட்டுப்பாடி, நடனமாடி...

எந்திரங்கள் மூலம் நடவுப்பணிகள் ஒருபுறம் இருந்தாலும், ஆட்கள் மூலம் நடவுப்பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறுவை நடவு செய்யாத பகுதிகளில் சம்பா நடவும், குறுவை அறுவடை செய்த பகுதிகளில் தாளடி நடவுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே பெண்கள் பாட்டுப்பாடியும், நடனமாடியபடியும் நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் இருசக்கர வாகனம், நடந்து செல்வோர்கள் சாலையோரத்தில் நின்று பெண்கள் பாட்டுப்பாடுவதை சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டு செல்கிறார்கள்.

Next Story