அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் தகவல்
அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு, மழைக்காலம் மற்றும் பண்டிகை காலம் தொடங்குதல், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஆகியவற்றால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் மருத்துவ குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு எல்லைப்பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 6 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் தற்போது இரவு நேரங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனாவுக்கு கடந்த வாரம் 1.6 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1.3 சதவீதத்திற்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, கொரோனா விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக வருகிற 13-ந் தேதி தூத்துக்குடியில் செய்தித்துறையுடன் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக புத்தாக்க திட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருவரங்குளம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு முதல் தவணையாக தலா ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவித் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
அப்போது கலெக்டர் உமாமகேஸ்வரி உடன் இருந்தார்.
Related Tags :
Next Story