உச்சிப்புளி வங்கியில் சில்லரை மாற்றுவதுபோல் பணம் மோசடி 4 பெண்கள் சிக்கினர்


உச்சிப்புளி வங்கியில் சில்லரை மாற்றுவதுபோல் பணம் மோசடி 4 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Oct 2020 10:06 AM IST (Updated: 12 Oct 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி வங்கியில் சில்லரை மாற்றுவதுபோல் பணம் மோசடியில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள தனியார் வங்கிக்கு 4 பெண்கள் வந்தனர். அவர்கள் வங்கி காசாளரிடம் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டனர். உடனே காசாளர் ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தார்.

அப்போது காசாளரின் கவனத்தை திசை திருப்பி மோசடியாக 500 ரூபாயை கூடுதலாக பெற்றுக்கொண்டு 4 பெண்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதேபோல் ராமேசுவரம் செல்லும் வழியில் பாம்பனில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடகு நிறுவனத்திலும் காசாளரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை மோசடியாக பெற்றுச்சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து வங்கி காசாளர் உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார். வங்கியில் காசாளரிடம் கூடுதலாக பணத்தை பெற்றுச்சென்ற 4 பெண்களையும் உடனடியாக பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விழுப்புரத்தை சேர்ந்த தேசிங்கு சாலமேடு மனைவி மாலினி மற்றும் ரவி என்பவரது மகள் பார்வதி, மணிவண்ணன் என்பவரது மனைவி மீனா (வயது 21), அதே ஊரைச் சேர்ந்த பாபு என்பவரது மனைவி மல்லிகா (25) ஆகிய 4 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.

Next Story