வேலூரில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 3 பேர் படுகாயம்


வேலூரில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Oct 2020 6:14 AM GMT (Updated: 12 Oct 2020 6:14 AM GMT)

வேலூரில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள சீலேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45), அணைக்கட்டில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய மகன் திருமலை (9), அணைக்கட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை குமார் தனது மகன் திருமலை மற்றும் நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர் ராஜா (17) ஆகியோருடன் காரில் ஆற்காட்டிற்கு சென்றார். காரை குமார் ஓட்டிச்சென்றார்.

பின்னர் அவர் மீண்டும் சீலேரி நோக்கி சென்றார். மதியம் 12 மணி அளவில் கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சேண்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் திடீரென மோதியது. இதில், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்து பாதியளவு லாரியின் பின்புறத்தில் புகுந்தது. விபத்தில் குமார் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கார் மற்றும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story