குலசேகரன்பட்டினம் அருகே இரு தரப்பினர் மோதல்; தந்தை-மகனுக்கு கத்திக்குத்து 8 பேர் மீது வழக்கு


குலசேகரன்பட்டினம் அருகே இரு தரப்பினர் மோதல்; தந்தை-மகனுக்கு கத்திக்குத்து 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Oct 2020 10:09 PM IST (Updated: 12 Oct 2020 10:09 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், தந்தை-மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் அருகே அய்யா நகரைச் சேர்ந்தவர் பண்டாரம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (60). அதே பகுதியைச் சேர்ந்தவர் மகராஜன் (42). இவருடைய மனைவி இசக்கியம்மாள் (40).

கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்டாரம் வளர்த்து வந்த நாய், இசக்கியம்மாளின் சேலையை கடித்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பேச்சியம்மாள் செங்கல்லால் இசக்கியம்மாளை தாக்கினார். இதில் இசக்கியம்மாள் காயம் அடைந்தார்.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்டாரம் வேலைக்கு சென்றபோது, அங்கு வந்த மகராஜன் மகன் தங்க இசக்கி (21) திடீரென்று பண்டாரத்திடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த பண்டாரம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே இசக்கியம்மாள் பால் வியாபாரத்துக்கு சென்றபோது, அங்கு வந்த பண்டாரம், அவருடைய மனைவி பேச்சியம்மாள், மகன்கள் ஆறுமுகம், நல்லமுத்து, மகள் சுடலைவடிவு ஆகிய 5 பேரும் சேர்ந்து இசக்கியம்மாளை கம்பால் தாக்கினர். இசக்கியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அவருடைய கணவர் மகராஜன், மகன் தங்க இசக்கி ஆகிய 2 பேரும் வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரையும் பண்டாரத்தின் குடும்பத்தினர் கத்தியால் குத்தினர்.

8 பேர் மீது வழக்கு

இதில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள், மகராஜன், தங்க இசக்கி ஆகிய 3 பேரும் உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், பண்டாரம், மகாராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story