விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 30 பேர் கைது


விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 30 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 2:27 AM IST (Updated: 13 Oct 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 30 இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே திருவள்ளூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்தும், விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் கே.கஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 30 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். மறியல் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story