மண்ணச்சநல்லூர் அருகே பிட்காயின் மோசடி: ஒருவரை கடத்திய வழக்கில் 8 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
மண்ணச்சநல்லூர் அருகே பிட்காயின் மோசடி தொடர்பாக ஒருவரை கடத்திய வழக்கில் 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சி, பச்சைவெளி பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 40). இவரும், இவருடைய மனைவி பானுமதியும் (32) சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 2 கார்களில் வந்த சிலர் ஜெயப்பிரகாசை காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் பானுமதி புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாசை கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், கல்லணை பகுதியில் ஜெயப்பிரகாஷ் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜெயப்பிரகாசுடன் தொடர்பில் இருந்த வாழ்மால்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை மர்ம நபர்கள் சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கணேசனின் மனைவி சுசீலா (35) மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த 2 புகார்களின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் 94 கரியமாணிக்கம் அருகே உள்ள தழுதாழபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா(30), அதே பகுதியை சேர்ந்த முருகேசன்(36), விஜய் என்கிற மணிகண்டன் (25), செல்வராஜ், கனகராஜ் (25), வலையூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன்(28), அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி(35), மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம், கருங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (39) ஆகிய 8 பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிட்காயின் என்ற ஆன்-லைன் வர்த்தகம் மூலம் பணம் செலுத்தினால் பல மடங்கு கிடைக்கும் என்று கணேசனும், ஜெயப்பிரகாசும் கூறியதால், நாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை அவர்களிடம் கொடுத்தோம். ஆனால், அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். கொடுத்த பணத்தை திருப்பி தரக்கேட்டு சம்பவத்தன்று கணேசன் வீட்டிற்கு சென்றோம். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால், நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றோம் என அவர்கள் கூறியதாக போலீசார் கூறினர்.
பின்னர் அவர்கள் 8 பேரும் திருச்சி ஜே.எம்.-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில், சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story