மின்வழித்தட பராமரிப்பு பணியின் போது திடீர் தொழில்நுட்ப கோளாறு சாலை சிக்னல் இயங்காததால் வாகன நெரிசல் மின் தடையால் முடங்கிய மும்பை


மின்வழித்தட பராமரிப்பு பணியின் போது திடீர் தொழில்நுட்ப கோளாறு சாலை சிக்னல் இயங்காததால் வாகன நெரிசல் மின் தடையால் முடங்கிய மும்பை
x
தினத்தந்தி 12 Oct 2020 9:33 PM GMT (Updated: 12 Oct 2020 9:33 PM GMT)

மின் வழித்தட பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் மும்பை பெருநகர் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை சிக்னல்கள் இயங்காததால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.

மும்பை,

மின் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மும்பையில் மின் தடை என்பது அபூர்வம்.

திடீர் மின் தடை

இதனால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மின் தடையால் ஏற்படும் பிரச்சினைகளை அனுபவிப்பதே இல்லை. ஆனால் நேற்று ஏற்பட்ட திடீர் மின் தடையால் பொதுமக்கள் திக்குமுக்காடி போனார்கள். காலை 10 மணி அளவில் மும்பை நகரம் முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டது.

இதேபோல மும்பையை அடுத்த நவிமும்பை, பன்வெல், தானே, கல்யாண், டோம்பிவிலி போன்ற மும்பை பெருநகர பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மும்பை பெருநகர பகுதிகளில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மின்சாரம் தடை பட்டதால் நகரமே முடங்கியது.

மின்சார ரெயில்கள் நின்றன

குறிப்பாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நின்றன. மணிக்கணக்கில் ரெயிலில் காத்திருந்த பயணிகள் வேறு வழியின்றி தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினர். மின்சார ரெயில் சேவை முடங்கியதற்கு மத்திய ரெயில்வேயும், மேற்கு ரெயில்வேயும் டாடா மின்வினியோக நிறுவனத்தை குற்றம்சாட்டின.

சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு தான் மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கின.

இதேபோல சாலைகளில் சிக்னல்கள் செயல்படாததால், வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.

நோயாளிகள் பாதிப்பு

மின்துண்டிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக கொரோனா நோயாளிகள் பாதிப்புக்குள்ளானார்கள். ஆஸ்பத்திரிகளுக்கு ஜெனரேட்டர், டீசல் வசதி, ஆக்சிஜன் வசதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் பணியில் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் துரித நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அலுவலகங்கள், நிறுவனங்களில் பணி முடங்கியது. பல கட்டிடங்களில் லிப்ட்டில் சிக்கி பலர் பரிதவித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வோர் தங்களது பணியை செய்ய முடியாமல் தவித்தனர்.

சீரான மின்சாரம்

பிற்பகல் வேளையில் வர்த்தக மையமான பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதி, மேற்கு புறநகர், தென்மும்பை பகுதியில் மின் வினியோகம் சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சில பகுதிகளில் இரவிலும் மின் வினியோகம் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே விமான நிலைய பணிகள், பங்கு சந்தை பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு

பராமரிப்பு பணியின்போது கல்வா, கார்கரில் உள்ள மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே மின் தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மின் தடை குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். இதுபற்றி மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கூறுகையில், “மின் வினியோகத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாகவும், இந்த பணி முழுமையடைந்ததும் விசாரணை நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

Next Story