பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்பானை, அடுப்பு இலவசமாக வழங்க வேண்டும் - மண்பாண்ட தொழிலாளர்கள் மனு


பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்பானை, அடுப்பு இலவசமாக வழங்க வேண்டும் -  மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 13 Oct 2020 3:45 AM IST (Updated: 13 Oct 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்பானை, அடுப்பு இலவசமாக வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

கோவை, 

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மனுவாக அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அதன்படி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாவட்டத்தலைவர் மருதாசலம், செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்பானைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக பச்சை அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற உணவு பொருட்களுடன் ரூ.ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் புது அரிசியை மண்பானையில் வைத்து பொங்கலிட மண்பானையும், அடுப்பும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு இலவசமாக தந்து உதவ வேண்டுகிறோம். இதன் மூலம் அவற்றை தயாரித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து பாரத்சேனா அமைப்பின் மாநில ஊடக பிரிவு தலைவர் பீமா பாண்டி மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், இந்து அமைப்பினருக்கு தூண்டுகோலாக இருந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு நினைவு மண்டபமும், உருவச்சிலையும் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்து அதிரடிப்படை நிறுவனர் ஜி.எஸ்.ராஜகுரு, சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் சி.பி.போஸ் என்ற குபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சில அமைப்புகள் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களின் முற்றுகை போராட்டம் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அந்த அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் பேரூராட்சி அனுமதியின்றி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 14-வது வார்டில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story