புதுவையில் அரசுப் பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா மாணவர்கள், பெற்றோர் பீதி


புதுவையில் அரசுப் பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா மாணவர்கள், பெற்றோர் பீதி
x
தினத்தந்தி 13 Oct 2020 4:12 AM IST (Updated: 13 Oct 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசுப் பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து புதுவை, காரைக்காலில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 8-ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பள்ளியில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டன. இதன்படி கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பெற்றோர்களின் ஒப்புதலுடன் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.

மாணவனுக்கு கொரோனா

இந்தநிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காராமணிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தொற்று பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவனுக்கு தொற்று உறுதியானதால் அவர் கல்வி கற்ற வகுப்பறை மூடப்பட்டது. பிற வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றன.

மாணவனுடன் தொடர்பில் இருந்த 15 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி இயங்கியது

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறியதாவது:-

பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் அமர்ந்து படித்த வகுப்பறை சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் இருந்த மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. தொடர்ந்து நேற்றும் வழக்கம் போல் பள்ளி இயங்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story