நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 Oct 2020 4:33 AM IST (Updated: 13 Oct 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.

நெல்லை,

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் நிறுவன தலைவர் கண்ணபிரான் பாண்டியன் தலைமையில், மாநில பொருளாளர் ஆறுமுகம் முன்னிலையில் நேற்று காலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை திரும்ப ஒப்படைத்து விட்டு, அதற்கு பதிலாக தேவேந்திரகுல வேளாளர் என சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், செழியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் கண்ணபிரான் பாண்டியன் தலைமையில் 10 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் சாதி சான்றிதழ்

அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்களுக்கு வழங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழில் பள்ளர் என்று உள்ளது. இந்த சாதி சான்றிதழை திரும்ப பெற்றுக்கொண்டு தேவேந்திரகுல வேளாளர் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து கண்ணபிரான் பாண்டியன் கூறுகையில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் அரசியலில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே எங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து உடனே நீக்க வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையெனில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உடனே சேர்க்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதைவிட நாங்கள் அகதிகளாக கூட வாழ்ந்து விடுவோம். எங்களுக்கு வருகிற சட்டசபை தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும். 20 மாவட்டங்களில் நாங்கள் அதிகளவில் வசித்து வருகிறோம். 8 மாவட்டங்களில் அரசியல் கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய இடத்தில் உள்ளோம். எனவே எங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story