தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.349¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்


தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.349¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 13 Oct 2020 4:58 AM IST (Updated: 13 Oct 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.349¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் 10.45 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பிலான அதிநவீன கருவியை இயக்கி தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு ரூ.71.61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஆராய்ச்சி ஆய்வகத்தையும் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து 11.15 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு மாற்றுத்திறனாளிகள் உணவகத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த கொரோனாவுக்கு எதிரான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைக்கிறார்.

ரூ.349¾ கோடி வளர்ச்சி திட்டங்கள்

அதன்பிறகு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21 கோடியே 34 லட்சம் மதிப்பிலான 15 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.328 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பல்வேறு துறைகள் மூலம் 10 ஆயிரத்து 591 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம், அம்மா இருசக்கர வாகன மானியம், கொரோனா சிறப்பு நிதி, நுண்ணீர் பாசன திட்ட மானியம் உள்ளிட்ட ரூ.29 கோடியே 88 லட்சத்து 94 ஆயிரத்து 989 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

பின்னர் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது. அதன்பிறகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மதியம் 2.45 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

உற்சாக வரவேற்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வருவதையொட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விமான நிலையம் முதல் தூத்துக்குடி வரை கட்சி கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. ஆங்காங்கே அலங்கார தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

இதற்கிடையே, விழா நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, செய்தித்துறை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

முதல்-அமைச்சர் வருகையையொட்டி, தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 19 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று மதியத்துக்கு மேல் முதல்-அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, செல்வன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் (பயிற்சி) அபிஷேக் குப்தா, அரவிந்தன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story