பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆதித்தமிழர் கட்சி-அழகு கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்


பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆதித்தமிழர் கட்சி-அழகு கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2020 5:04 AM IST (Updated: 13 Oct 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் மற்றும் அழகு கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மரணத்துக்கு உரிய நீதி வழங்க வேண்டும். அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று உத்தரபிரதேச முதல் -மந்திரி பதவி விலக வேண்டும். வேளாண்மை புதிய மசோதா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பிரகாஷ், முருகன், சண்முகம், சென்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அழகு கலை நிபுணர்கள்

இதேபோல் ஈரோடு மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவி மகேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மணி, பொருளாளர் செல்ல லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து உடலில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த வழக்கை மறுவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வழியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் துணைத்தலைவி திலகவதி, இணைச்செயலாளர் சண்முக பிரியா, ஆலோசகர் சுஸ்மிதா மற்றும் அழகு கலை நிபுணர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். இதில், உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாநகர செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story