வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2020 11:44 PM GMT (Updated: 12 Oct 2020 11:44 PM GMT)

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாகை எம்.பி. செல்வராசு உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஆதார விலை இல்லை. அரசு கொள்முதல் இல்லை. இலவச மின்சாரம் இல்லை. பதுக்கல், கள்ள சந்தை அனுமதிக்கப்படும். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும். தொழிலாளர் சட்ட தொகுப்பால் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை இல்லை. 8 மணி நேர வேலை வரம்பு இல்லை. வேலை, சம்பளம் உறுதியில்லை. கார்ப்பரேட்டுகளை பாதுகாக்க விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வை அழிக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட புதிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு நாகை எம்.பி. செல்வராசு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் செல்லமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை

இதேபோல் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியகுழு துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் மார்க்ஸ், ஒன்றிய துணை செயலாளர் குணசேகரன், விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் சிவசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குடவாசல்

குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசு, ஒன்றிய செயலாளர் சுப்ரவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சின்னையன், பாவாசுதாகர், நகர செயலாளர் நமசு, ஒன்றியக்குழுவை சேர்ந்த ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜ், நடராஜன், பாஸ்கர், அன்புரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த ரெங்கராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, உதயகுமார், கலியபெருமாள், வீரமணி, ஒன்றிய மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நீடாமங்கலம், நன்னிலம்

நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகக்குழுவை சேர்ந்த பாரதிமோகன், ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நன்னிலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து தாசில்தார் மணிமன்னனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கேசவராஜ் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவி.மணி, ஜெயபால், கதிர்வேல், மாதர் சங்க பொறுப்பாளர் சந்திரா, மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் சிவனேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் வக்கீல் வையாபுரி, ஒன்றிய தலைவர் பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள எழுப்பினர்.

கோட்டூர்

கோட்டூர் தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அம்புஜம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் பரந்தாமன், கூட்டுறவு வங்கி தலைவர் சிவசண்முகம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா, இளைஞர் பெருமன்ற செயலாளர் நல்லசுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திருவாரூர், குடவாசல், கோட்டூர் ஆகிய 3 இடங்களில் மறியலில் ஈடுபட்ட நாகை எம்.பி. செல்வராசு உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story