கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 11:59 PM GMT (Updated: 12 Oct 2020 11:59 PM GMT)

கொள்முதல் செய்யப்படாததால் தஞ்சை அருகே விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள தென்னங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யபடாமல் இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் தேக்கம் அடைந்தது. இதனால் தார்ப்பாய் மூலம் நெல் மூடப்பட்டு இருந்தது. 3 நாட்களுக்கு மேலாக நெல்லுடன் காத்திருந்த விவசாயிகள் நேற்று காலை தஞ்சை- கள்ளப்பெரம்பூர் சாலையில் நெல்லைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல நாட்களாக தேங்கி உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், கொள்முதல் அதிகாரி சரவணன் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

தேங்கும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்யவில்லை, இதனால் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. தேங்கிய மூட்டைகள் அப்புறப்படுத்திய பிறகு நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story
  • chat