கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள்
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமையையொட்டி கோரிக்கை மனுக்கள் அளிக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி, மனுக்களை அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட அறிவுறுத்தினர். அதன்படி அதில் மனுக்களை பெட்டியில் செலுத்தினர். இந்த நிலையில் கந்தர்வகோட்டை பகுதியில் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், கோவிலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் பட்டா போட்டு விற்க முயல்வதாகவும், அதனை தடுத்து நிறுத்தக்கோரியும், ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் நாளை (புதன்கிழமை) கல்லுக்குழியில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்திற்குள் அவர்கள் அனைவரும் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். மேலும் அப்பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தார். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை சின்னப்பா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்களது பகுதியில் பெண் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
Related Tags :
Next Story