கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 13 Oct 2020 5:33 AM IST (Updated: 13 Oct 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கச்சேரி சாலையில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் நேற்று மாலை 6 மணி அளவில் மாறுவேடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

ஜன்னல் வழியாக பணத்தை வீசினர்

பின்னர் இரவு 7 மணி அளவில் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அந்த அலுவலகத்தின் கதவுகள் திடீரென மூடப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த பணியாளர்கள் ரூ.23 ஆயிரத்து 380-ஐ அலுவலகத்தின் ஜன்னலுக்கு வெளியே திடீரென எடுத்து வீசினர்.

இந்த பணத்தை எடுத்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அந்த பணம் தொடர்பாக அங்கிருந்த பணியாளர்களிடமும், இணை சார்பதிவாளர் ஆசைதம்பியிடமும் 4 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விடிய, விடிய நடந்தது

மேலும் அலுவலகத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது? என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் 28 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆவணங்களை பதிவு செய்ய இந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதவிர இந்த அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை தனித்தனியே சோதனை செய்தனர். இதில் ஊழியர்கள் வைத்திருந்த பணம் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவிர அலுவலகத்துக்கு வந்து செல்லும் வெளிநபர்கள், புரோக்கராக செயல்படுபவர்களின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கவனமாக குறிப்பு எடுத்து பதிவு செய்து கொண்டனர்.

கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று விடிய, விடிய அதிரடியாக சோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story