விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 210 பேர் கைது


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 210 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 3:56 AM GMT (Updated: 13 Oct 2020 3:56 AM GMT)

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் விழுப்புரம் வட்ட செயலாளர் நிதானம், காணை ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் விக்கிரவாண்டியில் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், அரகண்டநல்லூரில் மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகி முருகன் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையிலும், கிளியனூரில் வட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வட்ட செயலாளர் தனுசு தலைமையிலும், கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 180 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட நிர்வாக குழு கருணாகரன், விவசாய சங்க மாநில நிர்வாக குழு வட்சுமி, மாவட்ட குழு அமுதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி என்ற ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வட்ட செயலாளர் அப்பாவு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணை செயலாளர் செந்தில், நகர செயலாளர் கருணாநி, மாவட்ட குழு உறுப்பினர் ரீட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் 10 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத் கரீம், வட்ட குழு நிர்வாகி பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், வேலன் உள்பட 20 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story