அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 13 Oct 2020 6:03 AM GMT (Updated: 13 Oct 2020 6:03 AM GMT)

அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் வழங்கக்கோரி 6 கிராம மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களை சேர்ந்த கதிரிபுரம், மரியப்பட்டி, வெங்கடதாரஅள்ளிபுதூர், பெரமாண்டபட்டி, நல்லகுட்லஅள்ளி, அஸ்தகிரியூர் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் 6 கிராமங்களில் வசித்து வருகிறோம். ஏழை, எளிய தொழிலாளர்களான எங்களுக்கு சொந்த வீடு இல்லை. சொந்தமாக இடமும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.720 கோடி மதிப்பில் 9 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ஏழை, எளிய மக்களிடமும் விண்ணப்பங்களை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஊராட்சி மன்ற அலுவலகம் செம்மாண்டகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நல்ல வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குண்டலப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு செம்மாண்டகுப்பத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story