அம்பை அருகே கால்வாய் பகுதியில் வந்து நிற்கும் காட்டு யானை பொதுமக்கள் அச்சம்


அம்பை அருகே கால்வாய் பகுதியில் வந்து நிற்கும் காட்டு யானை பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 Oct 2020 11:56 PM GMT (Updated: 13 Oct 2020 11:56 PM GMT)

அம்பை அருகே கால்வாய் பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி வந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொட்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள 80 அடி கால்வாய் அருகில் கடந்த ஒரு வாரமாக 4 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று தினமும் மாலை நேரத்தில் வந்து ஒரு வித சத்தம் எழுப்பி கண்ணீர் வடித்து அந்த வழிப்பாதையில் வந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த யானை உடல் நலம் பாதிக்கபட்டு இருப்பது போல் உள்ளது. இது தற்போது தாயிடம் இருந்து பிரிந்து இப்பகுதியில் வந்து கண்ணீர் வடித்து சத்தம் எழுப்பி வருவது போலவும் உள்ளது. இதனை வனத்துறையினர் உடனடியாக கவனித்து அந்த யானைக்கு வனத்துறை கால்நடை மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவ உதவி செய்து யானையின் கூட்டத்துடன் சேர வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

சேரன்மாதேவி

வீரவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை பீக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் நுழைந்து பனை, தென்னை, மா உள்ளிட்ட மரங்களை சாய்த்தும், பிடுங்கி எறிந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “வனப்பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டு யானை வெளியேறி தோட்டங்களில் நுழைந்து மரங்களை பிடுங்கி எறிந்து வருகிறது. இதுவரை சுமார் 50 பனை மரங்கள் உள்பட ஏராளமான மரங்களை பிடுங்கி எறிந்துள்ளது. யானைகள் நிரந்தரமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story