ஆண்டிப்பட்டி அருகே தரையில் அமரச்சொல்லி ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல் துணைத்தலைவர் மீது கலெக்டரிடம் புகார்


ஆண்டிப்பட்டி அருகே தரையில் அமரச்சொல்லி ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல் துணைத்தலைவர் மீது கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 14 Oct 2020 6:53 AM IST (Updated: 14 Oct 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே தரையில் அமரச்சொல்லி மிரட்டுவதாக துணைத்தலைவர் மீது ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பழனிசாமி. இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், “நான் ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறேன். நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை துணைத்தலைவர் தரையில் அமரும்படி மிரட்டி வருகிறார். ஊராட்சியில் எவ்வித பணியையும் செய்ய விடாமலும் தடுத்து வருகிறார். கடந்த 2 மாதங்களாக ஊராட்சி பொது நிதி மேலாண்மை மற்றும் இதர பணிகளுக்கு கையொப்பம் இட மறுத்து வருகிறார். இதனால், என்னால் மக்களுக்கு சேர வேண்டிய எந்த பணியையும் செய்ய முடியவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி துணைத்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இதேபோல், தேனி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் குழு கூட்டத்தில், கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், தனது ஊராட்சியில் இலவச ஆடு, கறவை பசு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் தடுப்பதாகவும், நான் தான் பயனாளிகளை தேர்வு செய்வேன் என்றும், தனது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கான ஒதுக்கீட்டையும் நான் தான் செய்வேன் என்றும் மிரட்டல் விடுப்பதாகவும், திட்டப்பணி நியமன அனுமதி உத்தரவு வழங்குவதை தாமதப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். எனவே மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 8 ஊராட்சிகளிலும் தலையீடு செய்வதை கண்டித்து, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story