ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் நிலத்தை ஒப்படைக்கக்கோரி ஆதார்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு - மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தீர்மானம்


ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் நிலத்தை ஒப்படைக்கக்கோரி ஆதார்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு - மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Oct 2020 9:18 AM IST (Updated: 14 Oct 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பி ஒப்படைக்க வில்லை என்றால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைப்பது எனவும், அடுத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் ஊர் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீரபாண்டி,

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகாலம் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 11.16 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 9 ஏக்கர் நிலத்தினை போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோவில் நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆண்டிபாளையம், இடுவம்பாளையம், சின்னாண்டிபாளையம், சின்ன கவுண்டன்புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்துப்புதூர் ஆகிய ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஊர் மக்கள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு, தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூடிய விரைவில் கோவில் நிலத்தை மீட்க, அனைத்து ஊர் பொதுமக்களும் இணைந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்கவும், இதைத்தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டையை தேசிய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில் நிலத்தை மீட்க மிகப் பெரும் போராட்டத்தை மக்கள் கையில் எடுத்து தொடர்ந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story