10 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்: கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மண்டல கண்காணிப்பு அதிகாரி உத்தரவு


10 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்: கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மண்டல கண்காணிப்பு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 14 Oct 2020 9:41 AM IST (Updated: 14 Oct 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 10 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மண்டல கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

விழுப்புரம்,

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மண்டல கண்காணிப்பு அதிகாரியாக கடலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சங்கரை நியமித்து சட்டம்- ஒழுங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மேற்கண்ட 10 மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல கண்காணிப்பு அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கடலூர் ஸ்ரீதரன், விழுப்புரம் ராஜன், திருவண்ணாமலை ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் திருவள்ளூர் விஜயலட்சுமி, காஞ்சீபுரம் வெற்றிச்செல்வன், ராணிப்பேட்டை திருநாவுக்கரசு, செங்கல்பட்டு ராஜாங்கம், கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்டங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பற்றியும், நிலுவையில் உள்ள ஆதாய கொலை, வழிப்பறி, கூட்டு கொள்ளை ஆகிய வழக்குகளை விரைந்து முடிக்கும்படியும் போலீஸ் அதிகாரிகளுக்கு மண்டல கண்காணிப்பு அதிகாரி சங்கர் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை போலீசாருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story