மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை உடலை துண்டு, துண்டாக கூறுபோட்ட வெளிநாட்டு பேரனுக்கு வலைவீச்சு


மூதாட்டி கழுத்தை அறுத்து படுகொலை உடலை துண்டு, துண்டாக கூறுபோட்ட வெளிநாட்டு பேரனுக்கு வலைவீச்சு
x

மூதாட்டியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த வெளிநாட்டு பேரன், அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு சம்பவம் பாந்திராவில் நடந்துள்ளது. தலைமறைவான பேரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டோபர் டயஸ் (வயது25). போதைப்பழக்கத்திற்கு அடிமையான இவர், மும்பையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற கடந்த 12-ந்தேதி பாந்திரா ஜபர் பாபா காலனியில் வசிக்கும் தனது பாட்டி ரோசி(80) என்பவரின் வீட்டிற்கு வந்திருந்தார். அன்றைய தினம் இரவு உறவினர்கள் ரோசி வீட்டிற்கு உணவு சாப்பிட வந்திருந்தனர்.

மேலும் கிரிஸ்டோபர் டயஸ் வீட்டில் இருந்ததால் அவரிடம் அறிவுரை கூற முயன்றனர். ஆனால் பாட்டி ரோசி அவர்களை தடுத்து போதை மயக்கத்தில் இருப்பதால் கிரிஸ்டோபர் டயசிடம் தற்போது எதுவும் பேச வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்தநிலையில் மறுநாள் கிரிஸ்டோபர் டயஸ் அங்கிருந்த கத்தியை எடுத்து தனது பாட்டி ரோசியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் உடற்பாகங்களை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு வீடு முழுக்க வீசினார்.

பின்னர் இஸ்ரேலில் இருந்து கோவா வந்திருந்த அவரது தந்தையை போனில் அழைத்து பாட்டியை கொலை செய்துவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடற்பாகங்கள் மீட்பு

இதனை தொடர்ந்து கிரிஸ்டோபர் டயஸ்சின் தந்தை உடனே மும்பைக்கு விரைந்தார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ரோசியின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வீடு முழுவதும் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்த மூதாட்டியின் உடற்பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கிரிஸ்டோபர் டயசை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story