மும்பையில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு புனேயில் மழை கொட்டியது


மும்பையில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு புனேயில் மழை கொட்டியது
x
தினத்தந்தி 15 Oct 2020 2:57 AM IST (Updated: 15 Oct 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புனேயில் நேற்று பலத்த மழை பெய்தது.

மும்பை,

வங்ககடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மராட்டியத்தின் விதர்பா, மரத்வாடா உள்பட வடக்கு மராட்டிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.எஸ். ஹோஸ்லிகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வடமராட்டியம் உள்பட கொங்கன் மண்டல பகுதிகளில் கனமழையும், இதைத்தவிர மும்பை, தானே, பால்கர், நவிமும்பை, புனே பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே நேற்று முதல் மும்பையின் பல பகுதிகளில் மேகமூட்டம் காணப்பட்டதுடன், சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

புனேயில் மழை கொட்டியது

தானே, பால்கர் மாவட்ட மீனவர்கள் அடுத்த 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

புனேயில் நேற்று பிற்பகல் முதல் மழை கொட்டியது. அடுத்த 2 நாட்களுக்கு புனே மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Next Story